Blogger news

adharva school

வியாழன், 29 செப்டம்பர், 2011

காற்றை எரிபொருளாக(கம்ப்ரஷ்டு ஏர்) பயன்படுத்தி செல்லும் புதிய கார்

காற்றை எரிபொருளாக(கம்ப்ரஷ்டு ஏர்) பயன்படுத்தி செல்லும் புதிய காரை டாடா வடிவமைத்து வருகிறது. ரூ.4லட்சம் விலையில் இந்த காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் விலை, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல காரணங்களால் கார்களுக்கான மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. பேட்டரியில் இயங்கும் கார், ஒயினில் ஓடும் கார் என்று மாற்று எரிபொருள் குறித்த ஆராய்ச்சி தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், கம்ப்ரஷ்டு காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய காரை டாடா வடிவமைத்து வருகிறது. பார்முலாஒன் கார் தயாரிப்பு எஞ்சினியர் ஒருவர் வடிவமைத்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கார் டாடா கார் வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி மையத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

மினிகேட் என்ற பெயரில் வரும் இந்த கார் பைபர் கிளாஸ் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இலகுவான எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருவதாக ஆட்டோமொபைல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காருக்கான எரிபொருள் செலவு மிக மிக குறைவாக இருக்கும். ஒரு கம்ப்ரஷ்டு ஏர் சிலிண்டர் மூலம் இந்த காரில் 300 கிமீ செல்ல முடியும். ஒரு கம்ப்ரஷ்டு ஏர் சிலிண்டரின் விலை ரூ.100 மட்டுமே ஆகும் என்று கூறப்படுகிறது.

மேலும்,மற்ற கார்களை போல கார்பன் புகையை வெளியேற்றாது என்பதால் சுற்றுச்சூழலுக்கு துளியும் மாசு ஏற்படுத்தாது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 6,000 கார்கள் தயாரிக்கப்பட இருப்பதாகவும், ரூ.4 லட்சம் விலையில் இந்த காரை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



நன்றி:தட்ஸ் தமிழ் 

திங்கள், 26 செப்டம்பர், 2011

தமிழக 'குடி'மக்களால் அரசுக்கு வருமானம் 15,0000௦ கோடி வருமானமாம்


தமிழகத்தில் குடிமக்களின் போதை மயக்கத்தால் அரசுக்கு ரூ.14,965 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளது. இத்தகவல் சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்கக் குறிப்பு செபடம்பர் 8 இல் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 6,690 சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 3,562 சில்லறை விற்பனைக் கடைகள் நகரங்களிலும், 3,128 கடைகள் கிராமப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 6,670 மேற்பார்வையாளர்களும், 16, 758 விற்பனையாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் (ஆயத்தீர்வை வருவாய், விற்பனை வரி சேர்த்து) தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 1995-96-ம் ஆண்டில் வருவாய் ரூ. 1,425 கோடியாக இருந்தது. இந்த வருவாய் சிறிது சிறிதாக அதிகரித்து கடந்த 2009-2010-ம் ஆண்டில் ரூ. 12,498 கோடியாக உயர்ந்தது. கடந்த நிதியாண்டில் (2010-2011) டாஸ்மாக் வருவாய் ரூ. 14,965 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகள் கடந்த நிதியாண்டில் 480.46 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள் 270.88 லட்சம் பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் மதுக் கடைகள் அனைத்தையும் அரசே ஏற்று டாஸ்மாக் மூலம் நடத்த ஆரம்பித்தது. அப்போது முதல் மது விற்பனையில் தமிழகம் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தமிழ் இந்தியா

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இன்று முதல் களைகட்டும் அரசு கேபிள் டிவி

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் விஜய் டிவி, போகோ உள்ளிட்ட கட்டணச் சேனல்களைக் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கேபிள் டிவி இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நடவடிக்கைகளை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் சென்னை நீங்கலாக ஏனைய 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பின் மூலம் 90 சேனல்கள் ஒளிபரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையைப் பெறும் சந்தாதாரர்களிடம் இருந்து மாதம் 70 ரூபாய் மட்டுமே கேபிள் டிவி ஆப்பரேட்டர்களால் வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இந்தச் சேவையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 2.9.2011 அன்று தொடங்கி வைத்தார். முதலில் இலவச சேனல்களை மட்டும் ஒளிபரப்பும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பின்னர் கட்டணச் சேனல்களையும் ஒளிபரப்பு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று முதல் விஜய் டிவி, ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், அனிமல் பிளாநெட், நியோ கிரிக்கெட், சோனி மேக்ஸ், ஏஎக்ஸ்என், எச்பீஓ, நேஷனல் ஜியாகிரபிக், என்டிடிவி, சிஎன்என், டைம்ஸ் நவ், ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டணச் சேனல்களும் எவ்விதக் கூடுதல் கட்டணமும் இன்றி ஒளிபரப்பப்படும்.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைந்துள்ள கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் மாதம் 70 ரூபாய் கட்டணத்திலேயே மேலே குறிப்பிடப்பட்ட கட்டணச் சேனல்களையும் கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையினர் பார்க்கும் சன் டிவி சேனல்கள் குறித்து அதில் எந்தத் தகவலும் இல்லை.


நன்றி:தட்ஸ் தமிழ்